இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரங்களைக் குவிக்கும் வகையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு இல்லாததால் பெட்ரோலியம், எரிவாயு உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்கள் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, இன்றியமையாப் பொருட்கள் விலை உயர்வு ஆகிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில் கொழும்பில் அதிபர் மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறை, தீவைப்பு ஆகியவற்றால் பதற்றம் ஏற்பட்டது. கொழும்பு விஜேராம பகுதியில் அரசுக்கு எதிராக நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதியில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவுப்பொருள், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு கோரியும், அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல்துறையின் தடியடியில் பலர் காயமடைந்தனர். போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலை பிறப்பித்துள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்யவும், விசாரணையின்றி நெடுங்காலம் சிறையில் அடைக்கவும் பாதுகாப்புப் படைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அவசரநிலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசுக்கெதிரான எதிர்ப்பையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உள்ளதாகவும், ஜனநாயகத்தில் இது தேவையானது என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் நாட்களில் பொருளாதார நிலைத்தன்மை ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.