இலங்கை அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணி கட்சிகள், அமைச்சரவையை கலைத்துவிட்டு காபந்து அரசை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக அந்நாட்டின் ஆளும் கட்சிக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகவும் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை அதிபர் மாளிகை முற்றுகையிட்ட விவகாரத்தில் பெண்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தை அடுத்து, அந்நகரின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
போராட்டத்திற்கு பின்னணியில் தீவிரவாதிகள் குழுக்கள் செயல்படுவதாகவும், ஆயுதங்கள் ஏந்திய கும்பல் போராட்டக்காரர்களுக்கு இடையே புகுந்து வன்முறையை தூண்டிவிட்டதாகவும் இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மக்களை தூண்டிவிட்டு நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் கலவரம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசை கலைத்து விட்டு காபந்து அரசை அமைக்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணி கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வலியுறுத்தியுள்ளன. இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனிடையே, அந்நாட்டின் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கடும் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் அதிகாலை முதலே அதிகளவிலான வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நுவரெலியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் மக்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், வசந்த கால நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.