பசுமை ஹைட்ரஜன் தயாரிக்க மூவாயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டொயோட்டா நிறுவனம் தயாரித்துள்ள ஹைட்ரஜன் காரில் நாடாளுமன்றத்துக்கு வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எத்தனால், மெத்தனால், பயோ டீசல், மின்சாரம், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றை உற்பத்தி செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கிலோமீட்டருக்கு 2 ரூபாய் செலவாகும் வகையில் பசுமை ஹைட்ரஜன் குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்றும், அதனால் எண்ணெய் இறக்குமதி குறைவதுடன் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும் தெரிவித்தார். நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தும் அனைத்துத் தொழில்களிலும் அதற்குப் பதில் ஹைட்ரஜன் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.