ஜெர்மனிக்கு படிக்கச் சென்ற பெண் ஒருவர், தாம் செல்லமாக வளர்த்த நாயை, பணம் கட்டி பராமரிப்பு மையத்தில் விட்டுச் சென்ற நிலையில், அந்த மையத்தின் பராமரிப்பாளர் நாயை அடித்துக் கொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
செங்கம் பகுதியைச் சேர்ந்த சர்மிளா என்பவர் கோல்டன் ரெட்ரைவர் எனும் வெளிநாட்டு நாயை சார்லி என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார். ஜெர்மனிக்கு மேற்படிப்புக்காக சென்ற சர்மிளா, வேளச்சேரியிலுள்ள Pet Paws என்ற தனியார் செல்லப்பிராணி பராமரிப்பு நிறுவனத்தில் நாயை ஒப்படைத்துள்ளார். நாயை பராமரிக்க மாதந்தோறும் 12ஆயிரம் ரூபாய் கட்டணமாகவும் ஷர்மிளா செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி ஷர்மிளாவை தொடர்பு கொண்ட பராமரிப்பு மைய ஊழியர், நாய் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
உடனடியாக ஜெர்மனியில் இருந்து புறப்பட்டு வந்த ஷர்மிளா, நாயின் சடலத்தை பெற்று, இறுதிச் சடங்கு செய்திருக்கிறார். ஆனாலும், சந்தேகமடைந்த ஷர்மிளா, அந்த பராமரிப்பு மையத்திற்கு சென்று சண்டையிட்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது, அங்கு வேலை செய்து வந்த வடமாநில பராமரிப்பாளர் நாயை தாக்கியது தெரியவந்தது. இயற்கை உபாதை கழித்ததற்காக நாயை கொடூரமாக தாக்கவே, சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த நாய், மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது.
சிசிடிவி ஆதாரத்துடன் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், பராமரிப்பு நிறுவன உரிமையாளர் ராம், ஊழியர்கள் மார்ட்டின் உட்பட மூன்று பேர் மீது மிருகங்களை கொல்லுதல், மிருகவதை தடை சட்டம் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.