உத்தரப்பிரதேசத்தில் 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
வாரணாசி, காசிப்பூர், மிர்சாப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 613 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 54 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.