ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தி அந்நாட்டை முற்றிலுமாக தனிமைப்படுத்த வேண்டும் என உலக நாடுகளை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனைத்து நாடுகளும் ரஷ்ய தூதர்களை வெளியேற்ற வேண்டும் எனவும், அந்நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கீவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்த புகைப்படத்தை இணைத்து அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதனிடையே, பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என ரஷ்யா பொய்கூறி வருவதாகவும், கிட்டத்தட்ட பொதுமக்கள் வசிக்கும் 40 இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகரான ஆண்டன் ஹெராஷென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.