உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நடவடிக்கையை கைவிடுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்கள், மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலையை வெளிப்படுத்தியிருந்த பிரதமர் மோடி, அவர்கள் பத்திரமாக நாடு திரும்புவதில் இந்தியா முன்னுரிமை அளிக்கும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், உக்ரைனில் சிக்கிய இந்தியர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாக அந்நாட்டு அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இரு நாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடலின் போது, உக்ரைன் மீதான படையெடுப்பு விவகாரம் குறித்தும், donbass உள்ளிட்ட பகுதிகளில் உக்ரைனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடர்பாகவும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, நேட்டா அமைப்புடனான உக்ரைனின் நெருக்கம் தான் போர் புரிய தூண்டியதாகவும் விளாடிமிர் புதின் விளக்கமளித்ததாக கூறப்பட்டுள்ளது.