கல்வி நிலையங்களுக்கு மாணவியர் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கக் கோரிய மனுக்களில் ஒன்றைத் தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், மற்ற மனுக்களையும் திரும்பப் பெற்றுப் புதிதாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிந்து செல்லத் தடை விதித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மாணவியர், சமூக ஆர்வலர் எனப் பலரும் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கில் ஹிஜாப்போ, வேறெந்த மதச் சார்புள்ள உடையோ அணிந்து செல்ல இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சமூக ஆர்வலர் சார்பில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக் கூறிய நீதிபதிகள் அதைத் தள்ளுபடி செய்தனர்.
5 மாணவியர் சார்பில் மனுதாக்கல் செய்த வழக்கறிஞரை இப்போதைய மனுக்களைத் திரும்பப் பெற்றுப் புதிய மனு தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தியதுடன் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.