ஆயுர்வேதச் சிகிச்சையால் தனது மகள் மீண்டும் கண்பார்வை பெற்றதாகக் கூறும் கென்ய முன்னாள் பிரதமர் ராய்லா ஒடிங்கா, கென்யாவில் ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தைத் தொடங்க உதவும்படி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கென்யாவில் 2008 முதல் 2013 வரை பிரதமராக இருந்தவர் ராய்லா ஒடிங்கா. இவர் மகள் ரோஸ்மேரிக்குப் பார்வை நரம்புப் பாதிப்பால் 2017ஆம் ஆண்டு பார்வை பறிபோனதாகக் கூறப்படுகிறது. பல நாடுகளில் சிகிச்சையளித்தும் பயனில்லாமல், கேரளத்தின் கொச்சியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.
சிகிச்சையின் பயனாக மீண்டும் கண்பார்வை பெற்றதாகக் கூறப்படும் நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை ராய்லா ஒடிங்கா இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, கென்யத் தலைநகர் நைரோபியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தைத் தொடங்கக் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.