பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா எனத் தெரிவித்த ராகுல்காந்தி வடகிழக்கு மாநிலங்களை விட்டுவிட்டதை அந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் கண்டித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் கேரளம் போல் ஆகிவிடும் என யோகி ஆதித்யநாத் கூறியதற்கு டுவிட்டரில் பதிலளித்த ராகுல்காந்தி, காஷ்மீர் முதல் கேரளம் வரையும், குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையும் உள்ள பண்பாடுகளின் ஒன்றியமான இந்தியா அழகானது எனத் தெரிவித்திருந்தார்.
இதைக் கண்டித்துள்ள திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், அழகான வடகிழக்கு மாநிலங்களை ராகுல்காந்தி மறந்து விட்டதாகவும், தாங்களும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, வங்கத்துக்கு அப்பால் வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூர் முதலமைச்சர் பிரன் சிங், தங்கள் இருப்பை ஏற்காத காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் எப்படி வாக்குக் கேட்கும் என்றும், நாட்டைப் பிரித்துப் பார்ப்பது யார் என்றும் வினவியுள்ளார்.