பீகாரில் கள்ளச்சாராயக் கும்பல்களுக்கு எதிராக டிரோன்கள், மோப்பநாய்கள், விசைப் படகுகள் உதவியுடன் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் 2016 ஏப்ரல் முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்ததற்குப் பதிலளித்த முதலமைச்சர் நிதிஷ்குமார், கள்ளச்சாராயம் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்திய பின் ஒருகோடியே 64 இலட்சம் பேர் குடிப்பழக்கத்தை விட்டுள்ளதாக முந்தைய ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், துல்லியமான புள்ளிவிவரங்களை அறியக் கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.