இந்தியாவை நவீனமாகவும், தற்சார்பு கொண்டதாகவும் உருவாக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாக்கலான மத்திய பட்ஜெட்டின் சிறப்புக் கூறுகள் குறித்து பாஜகவினரிடையே பிரதமர் மோடி காணொலியில் பேசினார். கொரோனா தொற்றுக்குப் பிறகு புதிய உலக நடைமுறை உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவைப் பற்றிய உலக நாடுகளின் கண்ணோட்டம் நிறைய மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு வலிமையான இந்தியாவைக் காண உலகம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார். அதே கண்ணோட்டத்துடன் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டை விரைவாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவை நவீனமாகவும், தற்சார்பு கொண்டதாகவும் உருவாக்குவது மிக முதன்மையானது என்றும், நவீனத்தை நோக்கிய பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு பட்ஜெட்டில் பல சிறப்புக் கூறுகள் உள்ளதாகவும் கூறினார்.
ஏழாண்டுகளுக்கு முன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் கோடி டாலராக இருந்ததாகவும், இன்று இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் கோடி டாலராக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு இருபதாயிரம் கோடி டாலரில் இருந்து 63ஆயிரம் கோடி டாலராக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வேளாண்மையை நவீனமாக்கல், இயற்கை வேளாண்மை ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதால், வேளாண்மை இலாபம் தரும் தொழிலாக மாறும் என்றும், டிரோன்கள், வேளாண்மைக்கான கருவிகள் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.