கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் ஏழாயிரத்து நானூறு கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூகுள் நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளில்,ஒன்று புள்ளி இரண்டு எட்டு விழுக்காடு பங்குகளை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைக்கச் செய்தல், 5ஜி தொலைத்தொடர்பு வசதிக்கான வலையமைப்பை இந்தியாவில் உருவாக்குதல், வணிகத்துக்கான கிளவுட் சூழல் அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு இந்த உடன்பாடு வகை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல்லுடன் உடன்பாடு செய்தது தொடர்புகளை விரிவுபடுத்தவும், இந்தியாவில் அதிகம்பேருக்கு இணையத் தொடர்புகள் கிடைக்கவும் வழிவகை செய்யும் எனக் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.