கர்நாடகாவில் சிதிலமடைந்திருந்த பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், பாலத்தின் மேல் சென்றுக் கொண்டிருந்த சரக்கு வாகனம் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பெல்லாரி மாவட்டம் பொம்மனல் கிராமத்தில் உள்ள இந்த கால்வாயை கடந்து செல்ல கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. அந்த பாலம் சிதிலமடைந்திருந்த நிலையில், நேற்று மாலை பாலத்தின் மீது காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்றுள்ளது.
அப்போது, திடீரென பாலம் இடிந்ததில், வாகனம் கால்வாய்க்குள் விழுந்து ஓட்டுனர் உட்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் போராடி வாகனத்தை கால்வாயில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.