மகர சங்கராந்தியையொட்டி நாட்டின் வட மாநிலங்களில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி வழிபட்டனர். ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரக்கண்ட் மாநிலம் அரித்துவாரில் மகர சங்கராந்தியையொட்டிக் கங்கையில் பொதுமக்கள் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கங்கையாற்றில் பொதுமக்கள் புனித நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி ஆள் நடமாட்டமின்றிக் காணப்பட்டது.
உத்தரக்கண்ட் மாநிலம் உத்தரகாசியில் தேவ்டோலி என்னும் பெயரில் இறைவனின் உருவச் சிலைகளைக் கொண்டுவந்து பாகீரதி ஆற்றில் நீராட்டும் விழா நடத்தினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் உள்ள குளத்தில் மகர சங்கராந்தியையொட்டிப் பக்தர்கள் புனித நீராடிச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் கங்கையாற்றில் மகர சங்கராந்தியையொட்டி வழக்கமாக ஏராளமானோர் புனித நீராடுவர். இந்த ஆண்டில் கொரோனா சூழலில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே நீராடிச் சென்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேற்கு வங்கத்தின் கங்கா சாகர் என்னுமிடத்தில் கடலில் புனித நீராடிப் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.