சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கும் உதி கண் மருத்துவமனை வங்கி கணக்கில் இருந்து,சிம் ஸ்வப் எனப்படும் நூதன முறையில் 24 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், மோசடி கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படை போலீசார் உத்தரப்பிரதேசம் விரைந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரித்ததில் பல முக்கிய தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பெற்றுள்ளனர். போலி முகவரிகள், போலி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகளை உருவாக்கியதை கண்டறிந்த போலீசார், இது குறித்து ஆதார் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், முறையாக சோதனை செய்யாமல் சிம் கார்டு ஆன்லைன் மூலம் மாற்றப்பட்டது எவ்வாறு என கேட்டு ஏர்டெல் தொலை தொடர்பு மண்டல அதிகாரியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.