தரையில் இருந்து தரையிலக்கைத் தாக்கும் திறனுள்ள பிரளய் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிச் சோதித்ததாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரளயம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்குப் பேரழிவு என்பது பொருளாகும். வெடிபொருட்களைச் சுமந்துகொண்டு 500 கிலோமீட்டர் வரை தொலைவில் உள்ள தரையிலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் பிரளய் என்னும் பெயருள்ள ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணையை ஒடிசா மாநிலக் கடற்கரையில் வாகனத்தில் இருந்து இன்று ஏவிச் சோதனை நடத்தியது. இந்தச் சோதனை வெற்றிபெற்றதாகவும் அதன் நோக்கங்களைத் துல்லியமாக நிறைவு செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏவுகணையைத் தயாரித்து ஏவிச் சோதனை நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு மற்றும் அதனுடன் இணைந்த அணியினருக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.