ஆந்திராவில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் முகமது ரியாஸை கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடப்பா, சித்தூர், நெல்லூர், பிரகாசம், கிருஷ்ணா, கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை வாங்கி அவர்களுக்கு பணம் எடுத்துகொடுத்தபின், வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விட்டு அவர்கள் சென்ற பிறகு ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
இதன் மூலம் கிடைத்த பணத்தில் முகமது ரியாஸ், தனது கடனை அடைத்ததோடு, 14 லட்சத்தில் புதிதாக வீடும் கட்டியுள்ளது தெரியவந்தது. அவனிடமிருந்து 3.40 லட்சம் ரொக்கம், போலி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.