தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று உருவாகும் எனக் கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி, அதே இடத்தில் நீடிப்பதால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த சுழற்சியானது கிழக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை நாளைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தென் கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரையில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இன்று முதல் 20-ஆம் தேதி வரை அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.