நாடு முழுவதும் ஒன்பது இலட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் நடப்புக் கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவைக் கண்டித்து ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் டிசம்பர் 16, 17 ஆகிய இரு நாட்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி இன்று பொதுத்துறை வங்கிகள், ஒருசில தனியார் வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள் 9 இலட்சம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிப் பணிகளும் பல இலட்சம் கோடி ரூபாய் வணிகமும் பாதிக்கப்பட்டன.