முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ.17.வி. 5 என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், கடந்த காலங்களில் இந்தியாவில் எம்.ஐ. ரக ஹெலிகாப்டரால் நிகழ்ந்த விபத்துக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், 2010ஆம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங்க் பகுதியில் இதே எம்.ஐ.17ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல, 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி, குஜராத்தின் ஜாம்நகரில் இரண்டு எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் விமானப் படை வீரர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி உத்தரகாண்டில் மழை, வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்த ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், ஹெலிகாப்டரில் இருந்த 5 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு அருணாச்சலபிரதேசத்தின் தவாங்க் பகுதியில் இதே வகை ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
2018-ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த MI 17 ரக ஹெலிகாப்டர் தரையிரங்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி இதே வகையிலான ஹெலிகாப்டர் ஜம்மு காஷ்மீரின் Budgam பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 18-ந் தேதி கூட அருணாச்சல பிரதேசத்திலுள்ள ரோச்சம் பகுதியில் தரையிரங்க முயன்ற எம்.ஐ.ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.