டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கத்தினர் விரைவில் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.
இருப்பினும், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் தர உத்தரவாதம் வழங்குவது, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்டவற்றை ஏற்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சிங்குவில் ஆலோசனை நடத்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, புதன்கிழமை பிற்பகலில் மீண்டும் கூட்டம் நடத்தி போராட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.