நாகலாந்தில் தீவிரவாதிகள் என நினைத்து பொதுமக்கள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ராணுவ நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சம்பவம் தொடர்பாக 21ஆவது பாரா சிறப்பு படைப்பிரிவினர் மீது அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை செய்யும் நோக்கிலும், காயப்படுத்தும் நோக்கிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தபட்டதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோன் மாவட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நெய்ஃபியூ ரியோ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 11 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.