ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரஷ்யாவின் ஏகே 203 வகையைச் சேர்ந்த 5 இலட்சம் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்குப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யாவின் கலாஸ்நிகோவ் நிறுவனத் தயாரிப்பான ஏகே 203 வகைத் துப்பாக்கி குறைந்த எடை, வலிமை, பயன்பாட்டில் எளிமை ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டது. இதன்மூலம் முந்நூறு மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கைக் குறிபார்த்துச் சுட முடியும். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு மாஸ்கோவுக்குச் சென்றபோது இவ்வகைத் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கக் கொள்கை அளவில் உடன்பாடு எட்டப்பட்டது. இன்று இருநாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்களும் டெல்லியில் பேச்சு நடத்துகின்றனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் மோடி ஆகியோரும் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது ஏகே 203 வகைத் துப்பாக்கிகளை அமேதியில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிப்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும். இந்தியப் படைகளின் தேவைக்குப் போக மீதியை ஏற்றுமதி செய்யவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் இரட்டை எஞ்சின்கள் கொண்ட காமோவ் 226 டி இலகு வகையைச் சேர்ந்த 200 ஹெலிகாப்டர்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்தும் உடன்பாடு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது.