நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முதல்நாளான இன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்நாளான இன்று, மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் சட்ட மசோதாவை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து வகை தனியார் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குபடுத்தவும் ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் நாணயத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதால் இதற்கான மசோதா நடப்பு தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தனிநபர் டேட்டா பாதுகாப்பு, வங்கி சீர்திருத்தம் உள்பட 26 புதிய சட்டமசோதாக்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், பெகாசஸ் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஆகியவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையான பயிர்களுக்கு அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 31 கட்சிகளைச் சேர்ந்த 42 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.