நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நாளை முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் கிரிப்டோகரன்சி மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 31 கட்சிகள் பங்கேற்றதாக நாடாளுமன்ற விவாகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கட்சிகளின் சார்பில் 42 தலைவர்கள் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் அவர் கலந்து கொள்ளவில்லை. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும் எனவும் பல கட்சிகள் வலியுறுத்தின.