சென்னை சூளைமேட்டில் சீல் வைக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டிற்கு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதியளித்தும் அவர் உள்ளே செல்ல மறுத்துவிட்டார்.
சூளைமேடு பெரியார் பாதை மேற்கில், அரசுக்கு சொந்தமான 2500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூர் அலிகானின் வீடு கட்டியிருப்பதாக புகார் எழுந்தது.
அரசு நிலத்தை மீட்கும் நோக்கில் அவரது வீட்டிற்கு அக்டோபர் 23 ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 28ஆம் தேதி வழக்கு தொடர்ந்ததோடு, தனது வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட வளர்ப்பு பூனையை மீட்க வீட்டை திறக்க வேண்டும் எனவும் மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 23ஆம் தேதி இதுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், அதற்காக ஒரு மணி நேரம் மட்டும் வீட்டை திறக்க அனுமதியளித்தது. அதையொட்டி, நேற்று வீட்டை திறக்க அதிகாரிகள் வந்த போது ஒரு மாதமாக உணவின்றி வீட்டிற்குள் பூனை உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதால், தனது வீட்டை திறக்க மறுப்பு தெரிவித்த மன்சூர் அலிகான், வழக்கை உச்ச நீதிமன்றம் மூலம் சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.