மகாராஷ்டிராவில் முன்னாள் மும்பை காவல் ஆணையாளர் பரம் பீர் சிங் மீது போடப்பட்டுள்ள 6 FIR களில் அவரை கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பார் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்தார் என்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகததால் அவர் மீது பிணையில்லா வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
அவர் மாயமான நிலையில் அவர் எங்கிருக்கிறார் என தெரிவிக்குமாறு கடந்தவாரம் அவரது வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அவரது வழக்கறிஞர், பரம் பீர் சிங்கின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவர் இந்தியாவில் தலைமறைவாக உள்ளதாகவும், அவருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சிபிஐ முன்பாக 48 மணி நேரத்திற்குள் அவர் ஆஜராக தயார் என்று கூறியதை ஏற்ற நீதிமன்றம், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பரம் பீர் சிங்கிற்கு அறிவுறுத்தியுள்ளது.