ஆன்லைனில் சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசிற்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதும் செயலிகள் வாயிலாக கடன் பெறுபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக ஆர்பிஐ வல்லுநர் குழு ஆலோசித்தது.
இந்நிலையில், உடனடி கடன் உள்ளிட்டவை வழங்குவது தொடர்பாக சுமார் 1,100 செயலிகள் உள்ளதாகவும், அதில் சுமார் 600 செயலிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த செயலிகள் வாயிலாக கடன் பெற்றவர்களிடம் இருந்து அதிக வட்டி வசூலிக்கப்படுவதாகவும், பணத்தை திருப்பிப்பெற தவறான வழிகளை கடைப்பிடிப்பதாவும் ஆர்பிஐ வல்லுநர் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தனிமனித விவரங்கள் திருடப்படும் அச்சுறுத்தல் உள்ளதால் இதுபோன்ற செயலிகள் மூலம் கடன் வழங்கும் முறையை மத்திய அரசு முறைப்படுத்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.