ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் இனி திருமணம் செய்துக்கொள்ளவும் , விவாகரத்து பெறவும் புதிய சிவில் சட்டத்தின் படி அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வளைகுடா நாடுகளை போல அபுதாபியில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் திருமணச் சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் அமீரகத்தில், சர்வதேச சமுதாயத்தின் வரவேற்பை பெறும் நோக்கில் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைகளை வளர்க்கும் உரிமை உள்ளிட்ட சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக தலைவர் Sheikh Khalifa bin Zayed al-Nahayan தெரிவித்துள்ளார்.
மேலும், அபுதாபியில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் விவகாரங்களுக்காக ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் செயல்படும் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.