அமெரிக்க உளவுத் துறையின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, சீனா புதிய ஹைபர்சோனிக் அணு ஆயுத ஏவுகணை ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் சோதித்துப் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
லாங் மார்ச் ராக்கெட் வாயிலாக செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை பூமியை உயரம் குறைவான சுற்றுப்பாதையில் வலம் வந்து தனது இலக்கை நோக்கி சென்றதாக Financial Express செய்தி வெளியிட்டுள்ளது. ஒலியின் வேகத்தைப் போல 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளே ஹைபர்சோனிக் ஏவுகணைகள் என அழைக்கப்படுகிறது.
சீனா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் 5 நாடுகள் இந்த ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பாலிஸ்டிக் ஏவுகணை தடுக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா வைத்திருந்தாலும் ஹைபர்சோனிக் ஏவுகணையை கண்டுபிடித்து தடுக்கும் திறன் அதற்கு இருப்பதாக தெரியவில்லை.
தைவானுக்கு அருகே சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதால் அமெரிக்காவுடனான அதன் உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சீனா இந்த சோதனையை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.