கொலை வழக்கு ஒன்றில், சர்ச்சைக்குரிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை விவரத்தை அரியானா சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் என்பவர் 2002 ல் கொல்லப்பட்டது தொடர்பாக குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் 4 பேர் குற்றவாளிகள் என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த 8 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவர்களுக்கு என்ன தண்டனை என்பது குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்க பஞ்ச்குலா மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது, கடந்த 2017-ல் நடைபெற்ற வன்முறைகளில் 37 பேர் கொல்லப்பட்டனர்.