லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் காரைக் கொண்டு மோதியதிலும், துப்பாக்கியால் சுட்டதிலும் விவசாயிகள் 4 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது.
விவசாயிகள் திருப்பித் தாக்கியதில் ஆஷிஷ் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற பிரியங்காவை சீதாப்பூரில் காவல்துறையினர் கைது செய்து அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தடுப்புக் காவலில் சிறை வைத்தனர்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து ராகுல்காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் ஆகியோர் விமானம் மூலம் லக்னோவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
லக்னோவில் இருந்து அவர்கள் காரில் லக்கிம்பூருக்குச் சென்று விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க உள்ளனர். இதனிடையே லக்கிம்பூருக்குச் செல்ல முதலில் யாரையும் அனுமதிக்காத உத்தரப்பிரதேச அரசு, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் மட்டும் லக்கிம்பூருக்குச் செல்ல இப்போது அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, மத்திய அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிந்துள்ளது குறித்துப் பிரதமர் கருத்துத் தெரிவிக்காததையும், நேற்று லக்னோவுக்குச் சென்ற பிரதமர் லக்கிம்பூருக்குச் செல்லாததையும் சுட்டிக்காட்டினார்.
கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை தற்போது வரை உத்தரபிரதேச அரசு கைது செய்யாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதிய கார் தங்களுடையதுதான் என்றும், ஆனால் அப்போது அதில் தன் மகன் இருக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
நிகழ்வு நேர்ந்த நேரத்தில் தன் மகன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மற்றொரு நிகழ்ச்சியில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் விவசாயிகளின் துயரத்தை அரசியலாக்கி உத்தரபிரதேசத்தின் அமைதியை குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜக செய்தி தொடர்பானர் சம்பித் பாத்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.