மும்பை அருகே சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் கைதான நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஆர்யன் கானின் மொபைல் போனில் இருந்து போதைப் பொருள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கண்டறியப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மேலும் சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதால், தொடர் விசாரணை அவசியம் என நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தயாரிப்பவர் குறித்து விசாரிக்கவில்லை எனில், அதன் சப்ளையர்கள் மற்றும் நிதி அளிப்பவர்களை கண்டறிவது கடினம் என்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கூறியுள்ளனர்.
இதனை ஏற்ற நீதிபதி, தொடர் விசாரணை நடத்தப்படுவது, விசாரிப்பவருக்கும், தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் முக்கியமானது என குறிப்பிட்டு, விசாரணைக் காவலை வரும் 7ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.