காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப்போவதாகவும், ஆனால் பாஜகவில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், தற்போது காங்கிரசில் தொடர்வதாகவும் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாவும் அம்ரீந்தர் கூறிய காட்சிகளை அவரது ஊடக ஆலோசகரான ரவீன் துக்ரால் டுவிட் பதிவு ஒன்றில் வெளியிட்டுள்ளார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சி மேலிடம் தம்மை அவமானப்படுத்தி விட்டதாக கூறி அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி வந்த அவர் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அவரது வீட்டுக்கே சென்று அவர் ஆலோசனை நடத்தியதால், அவர் பாஜகவில் சேருவது உறுதி என யூகங்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவில் சேர்ந்தால் அவருக்கு மத்திய வேளாண்மை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், முதன் முதலாக, காங்கிரசில் இருந்து விலகுவது பற்றியும், பாஜகவில் சேரமாட்டேன் என்றும் அமரீந்தர் சிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.