சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் திவாலாகும் நிலைமைக்கு வந்துள்ளதால், அதில் முதலீடு செய்திருந்த உலக மகா கோடீசுவரர்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் முதல் 10 மெகா கோடீசுவரர்களான எலான் மஸ்க், ஜெப் பிஸோஸ், பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பர்க்,வாரன் பபெட் உள்ளிட்ட பலருக்கு சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இழப்பு காரணமாக, உலகின் நம்பர் ஒன் கோடீசுவரரும், டெஸ்லா அதிபருமான எலான் மஸ்கின் மதிப்பில் 52 ஆயிரம் கோடி ரூபாய் சரிவு எற்பட்டுள்ளதாக புளூம்பெர்க்கின் பில்லியனேர் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனர் ஜெப் பிஸோசுக்கு 40 ஆயிரத்து 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குளோபல் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான எவர்கிராண்டின் பங்குகள் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தன. இதனால் அந்த நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் ஹுயி கா யென் ஆகியோரின் சொத்து மதிப்பு சரசரவென சரிந்து நிறுவனம் திவாலாகும் நிலைமைக்கு வந்துள்ளது.