அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதைத் தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 380 இடங்கள் இருந்தாலும் 469 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளதாக கூறினார்.
பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்தால் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்வதாக கூறிய அவர், 13 கோடியே 33 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் ஆலங்குளம் தொகுதியில் புதிய கலை-அறிவியல் கல்லூரி துவக்கப்படும் என குறிப்பிட்டார்.