ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்துக்குக் கொண்டுசெல்லும்பொழுது மறு பதிவு செய்வதைத் தவிர்க்கும் வகையில் புதிதாக பாரத் வரிசை கொண்ட பதிவு முறையை மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
பணி, தொழில் காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்துக்கு மாறிச் செல்வோர் அவர்களின் வாகனங்களையும் எடுத்துச் செல்கின்றனர். இந்த வாகனங்களை ஓராண்டுக்குள் மறு பதிவு செய்வதுடன், சாலை வரியும் கட்ட வேண்டியுள்ளது.
இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால் பாரத் வரிசை என்கிற புதிய பதிவு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை அலுவலர்கள், மத்திய மாநில அரசுப் பணியாளர்கள், பொதுத்துறைப் பணியாளர்கள், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் விருப்பத்தின் பெயரில் இந்தப் பதிவு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பாரத் வரிசைப் பதிவெண் கொண்ட வாகனங்களை ஒருமாநிலம் விட்டுப் பிற மாநிலங்களுக்கு எடுத்துச் சென்றால் மறுபதிவு செய்யத் தேவையில்லை. இந்தப் பதிவின்போது இரண்டாண்டுக்கான சாலை வரி பெறப்படும்.