ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் செவிலியருக்கு முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்துகொண்ட அயோக்கியனை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வார்டில், தன்னலம் கருதாது சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுபவர்களை தூக்கில் ஏற்றினாலும் தகும் என்ற எண்ணத் தூண்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், ஓங்கோல் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டு உள்ளது. அங்கு நோயாளி ஒருவருடன் இருந்த நபர், சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த செவிலியரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளான்.
தட்டிக்கேட்ட அந்த செவிலியரிடம் நோயாளிகள் முன்னிலையில் மிகமோசமான முறையில் அத்துமீறிய அந்த நபர், சாவகாசமாக அங்குமிங்கும் நடந்து சென்றதோடு, தன்னை யார் என்ன செய்ய முடியும் என காலியாக இருந்த படுக்கையிலும் திமிராக படுத்துக் கொண்டிருந்தான்.
கொரோனா வார்டில், தன்னலம் கருதாது சிகிச்சை அளித்த செவிலியரிடம், அந்த அயோக்கியன் அத்துமீறியபோது ஒரு சிலர் விலக்கி விட்டனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட செவிலியர் கூடியிருந்தவர்களிடம் முறையிட்டபோது, அந்த அயோக்கியனை சுளுக்கெடுக்காமல் சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் வேதனை.
வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பின்னர் அந்த அயோக்கியனை பிடித்து அடித்து உதைத்தாக சொல்லப்படுகிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் செவிலியரிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பெற்று, விஜய்குமார் என்ற அந்த குற்றவாளியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
பொது இடங்களில் பகிரங்கமாக பெண்களுக்கு பாலியல் தொல்லை நேரும்போது அதைப் பார்த்துக் கொண்டிருப்பது முறை அல்ல. அதிலும், தங்களது உயிரை துச்சமென மதித்து மற்றவர்கள் உயிரைக் காக்கும் மருத்துவத்துறையினருக்கு அத்துமீறல்கள் நேரும்போது, அவர்களை பாதுகாப்பதுதான் சமூகம் அவர்களுக்கு செய்யும் நன்றிக் கடனாக இருக்க முடியும்.