மருத்துவம் பல் மருத்துவப் படிப்புகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 விழுக்காடும் இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையின் ஓராண்டு நிறைவையொட்டி உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேவையான படிப்புகளில் சேரவும், ஆர்வமில்லாப் படிப்புகளில் இருந்து விலகிப் புதிய படிப்புகளில் சேரவும் நெகிழ்வுத் தன்மை கொண்ட கல்விச் சேவை அமைப்பைத் தொடங்கி வைத்ததுடன் இது ஒரு புரட்சிகரமான மாற்றம் எனத் தெரிவித்தார்.
பொறியியல் பாடங்கள் 11 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இது பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மாணவர்களுக்கு உதவியாக அமையும் என்றும் தெரிவித்தார்.