மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் வாங்க 58 லட்சம் ரூபாய் செலவாகும் என குறிப்பிட்டார்.
நிதி பிரச்னை உள்ளதால் தற்போது 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி, இந்தியா ஏழை நாடு எனவும் கூறினார்.
இதையடுத்து, ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளனரா? எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளையும் அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.