ஆப்கானிஸ்தானில் தாலிபனுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெறுவதால் கந்தகார் இந்திய தூதரக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 50 பேர் விமானப்படையின் தனிவிமானம் மூலம் நேற்றிரவு இந்தியா திரும்பினர்.
ஆப்கானில் கந்தகார் தூதரகம் மூடப்படவில்லை என்று விளக்கம் அளித்த வெளியுறவு அமைச்சகம் உள்ளூர் பணியாட்களுடன் தூதரகம் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூல் தூதரகம் வாயிலாக விசாக்கள், மற்றும் தூதரகப் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தத்தால் சுமார் 2 லட்சம் ஆப்கான் குடிமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு உயிரைக் காக்க புலம் பெயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் உள்ள 375 மாவட்டங்களில் தாலிபனுக்கும் ராணுவத்திற்கும் இடையே 200 மாவட்டங்களில் கடும் யுத்தம் நடைபெறுகிறது.