கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மேலும் 14 பேருக்கு சிகா வைரஸ் உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக எல்லைக்கு அருகில் உள்ள பாறசாலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகா வைரசால் பாதிக்கப்பட்டது ஆய்வகச் சோதனையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்குத் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதேபோல் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 14 பேருக்கும் சிகா வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
பகல் நேரத்தில் உலவும் ஏடிஸ் ஏஜிப்தி எனப்படும் பெண் கொசு கடிப்பதால் சிகா வைரஸ் பரவும் என்றும் இந்த வைரஸ் தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இலேசான காய்ச்சல், தலைவலி, தசை வலி, மூட்டு வலி, கண் சிவத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என்றும், சிலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல் இருக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிகா வைரசால் பாதிக்கப்படும் பெரும்பாலோர் 7 நாட்களுக்குள் குணமடைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. சிகா வைரஸ் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.