நீதிமன்றத்தின் நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியதாக கூறி மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு, கொல்கத்தா உயர் நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க தேர்தலில், நந்திகிராமில் போட்டியிட்ட மமதா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் நீதிபதி கவுசிக் சந்தாவுக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளதாகவும் எனவே வழக்கை அவர் விசாரிக்க கூடாது என்றும் மமதா புதிய மனுவையும் தாக்கல் செய்தார்.
இதை அடுத்து, வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள நீதிபதி கவுசிக் சந்தா, மமதா பானர்ஜிக்கு அபராதமும் விதித்துள்ளார்.