அரசின் டிஜிட்டல் சட்டங்களை மதிக்காத டிவிட்டர் நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தடையில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கைது செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தால் காவல்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தயார் என்று டிவிட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மணிஷ் மகேஸ்வரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.காணொலி வாயிலாக விசாரணை நடத்த அவர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்த நிலையில் விசாரணைக்கு ஒத்துழைப்புத் தரத் தயார் என்றும் மணிஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மத்திய அரசின் டிஜிட்டல் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றும்படி மத்திய அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வர உள்ளது.