ரஷ்யாவின் ஒரே டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தொடர்பான பரிசோதனை ஆவணங்களை இந்தியாவில் தாக்கல்செய்வதற்கு ஏதுவாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்திற்கு விதிகளைத் தளர்த்த நிபுணர்கள் குழு ஒப்புதல் வழங்கியது.
இதன் மூலம் இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் துணைக் குழுவான SEC எனப்படும் நிபுணர்கள் குழு, டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ் ஏற்கனவே பரிசோதனை செய்த ஆவணங்கள் தாக்கல் செய்வது போதுமானது என்று தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக் லைட்டுக்கான மூன்றாவது கட்டப் பரிசோதனைகள் ரஷ்யாவில் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இனி இந்தியாவில் தனியாக மூன்றாவது கட்டம் பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் விதிகளைத் தளர்த்தியுள்ளது.
இந்தியாவில் ஸ்புட்னிக் லைட்டை சந்தைப்படுத்த இப்போதுள்ள ஆவணங்களே போதுமானவை என்று நிபுணர்குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் லைட்டை விற்பனை செய்வதற்கான பங்கு உரிமையை ரஷ்யாவிடம் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரி பெற்றுள்ளது.