கர்நாடகத்தில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று 13 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்குழு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
மூன்றாவது கொரோனா அலை குறித்து வழிகாட்டல்களை வழங்க நியமிக்கப்பட்ட குழுவினர் 92 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் எடியூரப்பாவிடம் தாக்கல் செய்துள்ளனர்.
அதில் படிப்படியாக கல்லூரிகளையும் பள்ளிகளையும் திறக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவர்கள் தங்கள் கல்வி பயிலும் காலங்களை பல மாதங்களாக இழந்து விட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்திப் போடுவது குழந்தைத் தொழிலாளர், பால்ய திருமணம் , குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பது கடத்திச் செல்வது போன்ற பலவித கொடிய குற்றங்களுக்கு காரணமாகி விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.