முப்படைகளின் ஒருங்கிணைந்த கட்டளை மையங்கள் அமைப்பதற்கு ராணுவமும், கடற்படையும் ஆதரவாக உள்ள நிலையில், அதில் சிக்கல்கள் உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்குத் தனித்தனிக் கட்டளை மையங்கள் உள்ளன. அந்தமான் தீவில் மட்டும் ஒருங்கிணைந்த கட்டளை மையம் செயல்படுகிறது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் முப்படைகளின் ஒருங்கிணைந்த கட்டளை மையங்கள் உள்ளதைப் போன்று இந்தியாவிலும் அமைக்கப் பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
இது தொடர்பாக முப்படையினரையும் அழைத்துப் பேசும்படி முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். அதன்படி புதனன்று கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ராணுவமும், கடற்படையும் ஆதரவு தெரிவித்துள்ளன. தளவாடங்களைப் பகிர்ந்து கொள்வது, கட்டளைகளுக்குப் பெயரிடல், ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் தலைமை, தளபதிகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுவது ஆகிய பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.