மகாராஷ்டிர மாநிலம் சங்க்லி-குப்வாட் நகரில் ஒரே மாதத்தில் 77 நோயாளிகள் உயிரிழக்க காரணமாக இருந்த தனியார் கொரோனா சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மகேஷ் ஜாதவ் என்பவருக்கு சொந்தமான அபெக்ஸ் மருத்துவமனை என்ற இந்த தனியார் மையத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க 3 மாதங்களுக்கு முன்னர் அரசு அனுமதி வழங்கியது.
கொரோனா இரண்டாவது அலையின் போது இந்த மருத்துவமனையில் 205 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர்களில் 77 பேர் முறையான சிகிச்சை கிடைக்காமல் இறந்து விட்டனர்.
அதைத் தொடர்ந்து மருத்துவமனை உரிமையாளர் கைது செய்யப்பட்டு அவர் மீது மரணம் விளைவிக்கும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வென்டிலேட்டர் வசதி, கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு தகுதியான மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் என கொரோனா சிகிச்சைக்கான எந்த கட்டமைப்பு வசதிகளும் இந்த மருத்துவமனையில் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.