கொரோனா 3 ஆம் அலை வீசுவதை தடுக்க முடியாது என்றும் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அது இந்தியாவை தாக்க கூடும் எனவும் எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி பேட்டியில் இதை தெரிவித்துள்ள அவர், ஊரடங்கு படிப்படியாக விலக்கப்படுவதால், மக்களிடம் கொரோனா தடுப்பு குறித்த அச்சவுணர்வு குறைவதாக கூறினார். முதல் மற்றும் இரண்டாம் அலைகளுக்கு இடையே என்ன நடந்தது என்பதில் இருந்து மக்கள் பாடம் படிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், மீண்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரள்வதை சுட்டிக்காட்டினார்.
கோவிஷீல்டின் டோஸ் இடைவெளியை அதிகரித்ததை வரவேற்ற அவர், இதனால் மேலும் பலருக்கு முதல் டோசை போட இயலும் என்றார்.
கொரோனாவின் புதிய மரபணுமாற்ற வைரசான டெல்டா பிளஸ் உருவெடுத்து வந்திருப்பது இப்பொதுள்ள தடுப்பு மருந்துகளுக்கு சவாலாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.